வியாபாரத்தில் சாதனை புரிந்த ராதே ஷ்யாம்

வியாபாரத்தில் சாதனை புரிந்த ராதே ஷ்யாம்
Updated on
1 min read

ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது 'ராதே ஷ்யாம்' திரைப்படம்.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவதைப் பொறுத்தே, படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யவுள்ளது படக்குழு. ஆனால், படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்திய அளவில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் விற்பனையே சாதனையாகக் கருதப்பட்டது. தற்போது அதற்கு அடுத்தபடியாக 'ராதே ஷ்யாம்' படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனை நடந்துள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

'ராதே ஷ்யாம்' படத்தின் இந்தி ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதர மொழி ஓடிடி உரிமைகள் அனைத்தையும் ஜீ 5 கைப்பற்றி இருக்கிறது. அதேபோல் ஒட்டுமொத்த மொழிகளின் தொலைக்காட்சி உரிமையையும் ஜீ நிறுவனமே கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளது.

'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அளவில் மாபெரும் வியாபாரம் கொண்ட நடிகராக பிரபாஸ் வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in