நடிகைகள் குறித்த பார்வையை மாற்றியவர்கள் அனுஷ்கா - சமந்தா: ராஷி கண்ணா புகழாரம்

நடிகைகள் குறித்த பார்வையை மாற்றியவர்கள் அனுஷ்கா - சமந்தா: ராஷி கண்ணா புகழாரம்
Updated on
1 min read

அனுஷ்காவும் சமந்தாவும் தென்னிந்திய நடிகைகள் குறித்த மக்களின் பார்வையை மாற்றியவர்கள் என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நாயகியாக வலம் வருபவர் ராஷி கண்ணா. ‘தோழி ப்ரேமா’, 'பெங்கால் டைகர்’, 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'அரண்மனை 3' படத்தில் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ராஷி கண்ணா ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

''சினிமா துறை என்பது இப்போதும் ஆணாதிக்கம் நிறைந்த துறையாகத்தான் இருக்கிறது. எனினும் புதிய படங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டால், பெண்கள் தங்களுக்கான வழியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

நான் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது ’ஊஹலு குஸகுஸலடே’ படத்தின் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் எனக்குக் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு கிடைத்தவை எல்லாம் கமர்ஷியல் படங்களே. அதன் பிறகு ‘தோழி ப்ரேமா’ படம்தான் அனைத்தையும் மாற்றி எனக்கு நடிக்கவும் தெரியும் என்று மக்களுக்குத் தெரியச் செய்தது.

தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும். இவர்கள் இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்த மக்களின் பார்வையை மாற்றியவர்கள். அதற்கு முன்பெல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும், பாடல் காட்சிகளில் நன்றாக நடனம் ஆட வேண்டும். ஆனால், இப்போது நல்ல நடிகையாகவும் இருக்கவேண்டும். தென்னிந்தியாவிலும் ஏராளமான நல்ல நடிகைகள் இருக்கின்றனர். நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்''.

இவ்வாறு ராஷி கண்ணா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in