விபத்தில் குறைந்த காயங்களோடு தப்பியது என் அதிர்ஷ்டமே: ஃபகத் பாசில் பகிர்வு

விபத்தில் குறைந்த காயங்களோடு தப்பியது என் அதிர்ஷ்டமே: ஃபகத் பாசில் பகிர்வு
Updated on
1 min read

மலையன் குஞ்சு திரைப்படப் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து நடிகர் ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

நடிகர் ஃபகத் பாசிலின் 'மாலிக்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கரோனா நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, 'ஸி யூ ஸூன்', 'ஜோஜி', 'இருள்' என மூன்று திரைப்படங்கள் ஃபகத்தின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

ஆனால் இவை அனைத்துமே ஓடிடி வெளியீட்டுக்காக எடுக்கப்பட்டவையே. ‘மாலிக்' பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரையரங்க வெளியீட்டுக்காக எடுக்கப்பட்ட படம். ‘டேக் ஆஃப்’, ‘ஸி யூ ஸூன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் கரோனா நெருக்கடியால் மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற நிச்சயமில்லாத சூழலில் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் முடிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தன் ரசிகர்களிடம் படம் ஏன் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து ஃபகத் பாசில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் சமீபத்தில் தனக்கு நடந்த விபத்து குறித்தும் அவர் பேசியுள்ளார்.

"மலயன்குஞ்சு படப்பிடிப்பில் எனக்கு நேர்ந்த விபத்திலிருந்தும் நான் தேறி வருகிறேன். எனவே எனது நாட்காட்டியில் மார்ச் 2ஆம் தேதியிலிருந்தே ஊரடங்கு தொடங்கிவிட்டது. என் மருத்துவர் நான் ஆபத்தின் அருகில் சென்று தப்பித்ததாகச் சொன்னார்.

நமது உடலின் தன்னிச்சையான தற்காப்பு உணர்வின் காரணமாக எனது முகம் தரையில் மோதுவதற்கு முன் என் கைகளைத் தரையில் வைத்துவிட்டேன். விழும் ஆழம், அந்த அதிர்ச்சி, இவற்றினால் கீழே விழுபவர்களில் 80 சதவிதம் பேர் செய்யத் தவறும் விஷயம் இது. நான் விழுந்த நேரத்தில் சமோயோசிதமாக யோசித்தது எனது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார்" என்று ஃபஹத் ஃபாஸில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதனால் அவருக்கு மூக்கின் மேல் மூன்று தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும், அதன் தழும்புமறைய சில காலம் ஆகும் என்றும், இந்த விபத்தில் தனக்குக் கிடைத்திருக்கும் அதிகபட்ச காயம் இதுவே என்றும் ஃபகத் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in