மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசின்: 'பிரேமம்' ரகசியம் பகிர்ந்த அல்போன்ஸ் புத்திரன்

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசின்: 'பிரேமம்' ரகசியம் பகிர்ந்த அல்போன்ஸ் புத்திரன்
Updated on
1 min read

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் அசினை நடிக்க வைக்க முயன்றதாக 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

அதிலும், இந்தப் படத்துக்குப் பிறகு இப்போது வரை பலரும் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்றே அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

அப்போது ரசிகர் ஒருவர், "உங்கள் கடந்த படங்களில் தமிழின் தாக்கத்தை கவனித்திருக்கிறேன். உதாரணம் மலர் டீச்சர் கதாபாத்திரம், தமிழ்ப் பாடல்கள் போன்றவை. கண்டிப்பாக நீங்கள் சென்னையில் வாழ்ந்தபோது உங்கள் நண்பர்கள் வட்டம், இருந்த சூழல் எல்லாம் உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அது உங்கள் படங்களிலும் தெரிகிறது.

திரைப்படம் என்பது இயக்குநரின் விருப்பம்தான், அது அவர்களின் அனுபவத்தின் மூலம் பிறக்கிறது. 'பிரேமம்' படத்தில் சண்டைக்கு, நடனத்துக்குப் பின்னணியில் தமிழ்ப் பாடல் கச்சிதமாக இருந்தது. கல்லூரிக் காட்சிகள், அதன்பின் வந்த காட்சிகள், மாஸ் காட்சிகள் எல்லாமே நன்றாக இருந்தன. தமிழ் பேசும் நாயகியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மலையாளத் திரைப்படங்களில் தமிழ் மொழியின் தாக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? மலர் கதாபாத்திரம் மலையாளம் பேசுபவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

"முதலில் நான் திரைக்கதை எழுதும்போது அந்தக் கதாபாத்திரம் மலையாளியாகத்தான் இருந்தது. அதில் அசின் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என்னால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிவினும் முயன்றார். பிறகு அதைக் கைவிட்டோம், தமிழ் கதாபாத்திரமாக மாற்றினேன். இது திரைக்கதை எழுத ஆரம்பித்த நிலையிலேயே நடந்தது. என் சிறுவயதில் ஊட்டியில் படித்தேன். கல்லூரி சென்னையில். அதனால் இந்தத் தமிழ்த் தாக்கம்".

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in