Published : 05 Jun 2021 12:57 PM
Last Updated : 05 Jun 2021 12:57 PM

புதிய இயக்குநர்களுக்கான அறிவுரை: ரசிகரின் கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் பதில்

கொச்சி

புதிய இயக்குநர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்திரன். 'நேரம்' மற்றும் 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகவுள்ள 'பாட்டு' படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளர், நடிகர், எடிட்டர், கதாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார் அல்போன்ஸ் புத்திரன்

இவருடைய இயக்கத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியத் திரையுலகில் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுக் கொண்டாடித் தீர்த்தார்கள். இப்போதும் இதன் காட்சியமைப்புகள், பாடல்கள் என ரசிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (ஜூன் 4) அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர், "என் கையில் நல்ல கதை இருக்கிறது, அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்? புதிய இயக்குநர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்" என்று கேட்டிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

"ஒரு தயாரிப்பாளரைத் தேடிப் பிடித்து அந்தக் கதையைப் படமாக்குங்கள். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் உங்கள் நண்பர்களை, உறவினர்களைக் கேளுங்கள். பணத்தைத் திரட்டி படத்தை எடுக்கப் பாருங்கள். வளரும்போது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் இறங்கும்போது அவர்கள் அனைவரும் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். எனவே உங்களிடம் இனிமையாக இருக்கும் அனைவரிடமும் இனிமையாக இருங்கள்.

இதில் உங்களுக்கு துரோகம் செய்பவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் திட்டம் படமெடுப்பது. துரோகம் செய்தவர்களைப் பழிவாங்குவது அல்ல. கவனச் சிதறல்கள் அத்தனை பக்கங்களிலிருந்தும் வரும். தன்னம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருப்பதைப் படமாக்குங்கள். உங்கள் நோக்கம் நன்றாக இருந்தால் அந்த நோக்கம் உங்களைக் காப்பாற்றும்".

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x