Published : 01 Jun 2021 07:27 PM
Last Updated : 01 Jun 2021 07:27 PM

கரோனா அச்சுறுத்தல்: தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவும் யாஷ்

பெங்களூரு

3000 தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளார் யாஷ்.

இந்திய அளவில் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகவும் அதிகம். கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். மேலும், திரையுலகில் கடும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

திரையுலகில் பணிபுரியும் தினசரி தொழிலாளர்கள் பலரும் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள். இதனால் அவர்களுக்குக் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை மனதில் வைத்து பல்வேறு முன்னணி நடிகர்களும் உதவிகள் செய்து வருகிறார்கள்.

தற்போது கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ், சுமார் 3000 தினசரி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு 5000 ரூபாய் அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இந்த உதவி தொடர்பாக யாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தோற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாம் இருக்கும் இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன்.

இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை".

இவ்வாறு யாஷ் தெரிவித்துள்ளார்.

'கே.ஜி.எஃப்' படத்தின் 2-ம் பாகமான 'கே.ஜி.எஃப் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார் யாஷ். இதன் இறுதிக்கட்டப் பணிகள் யாவும் கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜூலை 16-ம் தேதி வெளியாவதாக இருந்த 'கே.ஜி.எஃப் 2' தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x