

ஜூனியர் என்.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவரிடம் நலம் விசாரித்துள்ளார் சிரஞ்சீவி.
இந்தியாவில் கரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், சில மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.
கரோனா தொற்றின் 2-வது அலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்குத் திரையுலகில் அல்லு அர்ஜுனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து இன்று (மே 12) தான் மீண்டுள்ளார்.
இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர் பூரண நலம்பெற பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்று (மே 12) ஜூனியர் என்.டி.ஆரைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் மூத்த நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சிறிது நேரத்துக்கு முன் ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசினேன். அவர் வீட்டுத் தனிமையில் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறார். அவரும் அவர் குடும்பத்தினரும் நலமாக உள்ளனர். அவர் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டேன். விரைவில் அவர் முழு நலனடைய வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.