

மே 13 அன்று வெளியாகவிருந்த சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' திரைப்படம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆச்சார்யா'. உடன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மட்டுமே திங்கட்கிழமை (ஏப்ரல் 26) அன்று 10,000க்கும் அதிகமானோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"தற்போது நிலவும் தொற்றுச் சூழலை மனதில் வைத்து மே 13 அன்று 'ஆச்சார்யா' திரைப்படத்தை நாங்கள் வெளியிடப் போவதில்லை. சூழல் சகஜமான பிறகு புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று கொனிடேலா தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக, திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியான பல தெலுங்குத் திரைப்படங்கள் தொடர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 'கிராக்', 'மாஸ்டரி'ன் தெலுங்கு டப்பிங், 'உப்பெனா', 'ஜாதி ரத்னாலு' உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன.