இதை விட வேறென்ன வேண்டும்? - ‘புஷ்பா’ பட அனுபவங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா

இதை விட வேறென்ன வேண்டும்? - ‘புஷ்பா’ பட அனுபவங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா
Updated on
1 min read

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ‘புஷ்பா’ பட அனுபவங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார்.

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் முழு வீச்சில் நடந்து வருகிறது. செம்மரக் கடத்தல் விவகாரம் தொடர்பான கதை என்று கூறப்படும் 'புஷ்பா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வனப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுடனான இணையவழிக் கலந்துரையாடல் ஒன்றில் ‘புஷ்பா’ படம் குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘புஷ்பா’ படம் மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. மும்முரமாக, அதேசமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். சுகுமார் சார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?''

இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன் குறித்து ஒரே வார்த்தையில் கூறுமாறு கோரிய ரசிகர் ஒருவருக்கு, “அவர் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்” என்று ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in