விஜய் தேவரகொண்டா -சுகுமார் திரைப்படம் கைவிடப்படுகிறதா?- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விஜய் தேவரகொண்டா -சுகுமார் திரைப்படம் கைவிடப்படுகிறதா?- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

Published on

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருந்த படம் திட்டமிட்டபடி நடக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபால்கன் க்ரியேஷன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் சுகுமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் தான் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக விஜய் தேவரகொண்டா பகிர்ந்திருந்தார். 2022ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிக்க 'புஷ்பா' திரைப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இதன் பிறகு விஜய் தேவரகொண்டா திரைப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் விஜய் தேவரகொண்டாவுக்கு பதிலாக ராம் சரண் தேஜா இந்தப் படத்தில் நடிப்பார் என்று டோலிவுட்டில் செய்திகள் பரவின.

தற்போது இதை மறுத்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், "விஜய் தேவரகொண்டா நடிப்பில் சுகுமார் இயக்கும் எங்கள் பெருமைக்குரிய முதல் திரைப்படத் தயாரிப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஏற்கெனவே இயக்குநர் மற்றும் நாயகர் இருவரும் முடிக்க வேண்டிய படங்களை முடித்த பிறகு இந்தப் படம் திட்டமிட்டபடி தொடங்கும்.

சிலர் பரப்பும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இதுபோன்ற சரிபார்க்காமல் பரப்பப்படும் புரளிகளை, பொய்யான பிரச்சாரங்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். திட்டத்திலும், இந்த இணையிலும் எந்த மாற்றமும் இல்லை. இது இன்னும் பிரம்மாண்டத் திரைப்படமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in