

தனக்கு மொழி எப்போதும் ஒரு தடையாக இருந்தது இல்லை என நடிகர் ராணா கூறியுள்ளார்.
நடிகர் ராணாவின் 'காடன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் 'ஆரண்யா' என்கிற பெயரிலும், இந்தியில் 'ஹாத்தி மேரே ஸாத்தி' என்கிற பெயரிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சினிமா துறைக்குள் நுழைந்து நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் ராணா பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
''நான் சினிமா துறைக்குள் வந்த காலகட்டத்தில் இங்கு திரைப்படங்களே பிரதானம். அதற்கு மாற்றாக வேறு எதுவும் கிடையாது. அப்போது எனக்குத் தேர்வுகள் மிகக்குறைந்த அளவில் இருந்தன. நான் பெருமளவில் காதல் படங்களில் நடித்திருக்கவில்லை. நான் கல்லூரிக்கும் சென்றதே இல்லை. அதனால் என்னால் காதல் படங்களோடு என்னைத் தொடர்புப்படுத்திக் கொள்ள இயலவில்லை. ஆக்ஷன், பழிவாங்குதல் போன்ற ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களிலும் எனக்கு விருப்பம் கிடையாது.
மொழி எப்போதும் எனக்கு ஒரு தடையாக இருந்தது இல்லை. நான் விரும்பிய அனைத்தும் என்னைத் தேடிவந்தன. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல கதைகள் எனக்கு வருகின்றன. எனவே, ஒரு கலைஞனாக இது எனக்கு மிகவும் அழகான ஒரு தருணம். கதை சொல்லலுக்கு இதைவிடச் சிறப்பான தருணம் ஒன்று இருக்கவே முடியாது''.
இவ்வாறு ராணா கூறியுள்ளார்.