ஃபகத் பாசிலின் அடுத்த படமும் ஓடிடியில் வெளியீடு

ஃபகத் பாசிலின் அடுத்த படமும் ஓடிடியில் வெளியீடு
Updated on
1 min read

ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் ’இருள்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

முன்னதாக, படத்தின் ட்ரெய்லரை வியாழக்கிழமை அன்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது. ஃபகத், ஷோபின், தர்ஷனா என மூன்றே மூன்று கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை நஸீஸ் யூஸுல் இஸூதின் இயக்கியுள்ளார்.

"ஆர்ப்பாட்ட இசை, ஃபகத் பாசில், இன்னும் நிறைய மர்மம். எங்களுக்குப் பிடித்த எல்லாம் இருளில் இருக்கிறது. இன்னும் அதிகமாகவும் இருக்கிறது. ஏப்ரல் 2-ல் படம் வெளியாகிறது" என்று நெட்ஃபிளிக்ஸ் தனது ட்ரெய்லர் பகிர்வு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்கும்போது எழுத்தாளரான ஷோபின், கொலைகாரரான ஃபகத்தைப் பற்றி தர்ஷனாவிடம் கூறுவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கொலைகாரனைப் பற்றிய கதை இது என்று ஷோபின் கதாபாத்திரம் பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, ஃபகத் பாசில், தர்ஷனா நடிப்பில் ’சி யூ ஸூன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்தைப் போலவே ’இருள்’ திரைப்படமும் ஊரடங்கு சமயத்தில், குறைந்தபட்சப் படக்குழுவை வைத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடிகர் ஃபகத் பாசில் விடுகதை பாணியில் கேள்வி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதுவே இந்தப் படத்தின் கதைச் சுருக்கம் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். "பனி படர்ந்த ஒரு வெளியில் கொல்லப்பட்ட ஒரு நபரின் உடல் கிடைத்தது. இரண்டு கோடுகளுக்கு நடுவில் இருந்த இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே கிடைத்த ஒரே ஆதாரம். காவல்துறை யாரைத் தேடுகிறது?" என்று ஃபகத் பகிர்ந்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in