

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'சச்சின்', 'ஆறு', 'வில்லு', 'கந்தசாமி', 'சிங்கம் 2', 'பிரம்மன்', 'புலி' உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இதுவரை தான் இசையமைத்த படங்களில் வரும் பாடல்களில் மட்டும் சில காட்சிகள் வந்து சென்றார். சில நாட்களாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்க கதைகள் கேட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை அவருடைய நண்பரும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநருமான சுகுமார் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தை தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார்.
அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கும் இப்படத்தில் 2 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத்தே இசையமைக்கவும் இருக்கிறார்.