

போனி கபூர் மற்றும் ராஜமெளலி இருவருக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் சமரச முயற்சியில் அஜய் தேவ்கன் ஈடுபட்டுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
வரும் அக்டோபர் 13, 2021 அன்று ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்துள்ள 'மைதான்' படமும் அதே தேதியில் வெளியாகும் என முன்பே அறிவித்துள்ளனர்.
'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் இந்த திடீர் அறிவிப்பால் 'மைதான்' படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். 'மைதான்' படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்திருந்தாலும், 'ஆர்.ஆர்.ஆர்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரே தேதியில் இரு படங்களும் வெளியாவதால் வசூல் கடுமையாகப் பாதிக்கப்படும். இது தொடர்பாக வெளிப்படையாகத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்தார் போனி கபூர்.
தற்போது போனி கபூர் மற்றும் ராஜமெளலி இருவருக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமரச முயற்சியில் அஜய் தேவ்கன் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஒரு சந்திப்பை உருவாக்க முயன்று வருகிறார். ஆனால், இப்போது வரை இருவருமே இதற்குச் செவி சாய்க்கவில்லை என பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பு முயற்சி வென்றால், இரு படங்களுக்கும் இடையேயான வெளியீட்டுச் சர்ச்சை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.