பூரி ஜெகந்நாத் - விஜய் தேவரகொண்டா இணையும் ‘லைகர்’

பூரி ஜெகந்நாத் - விஜய் தேவரகொண்டா இணையும் ‘லைகர்’

Published on

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்துக்கு ‘லைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. இப்படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்திய அளவிலான எங்கள் படத்தைப் பற்றி அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வழக்கமான சமூகக் கட்டமைப்பின்படி என்போன்ற பின்னணியிலிருந்து வரும் ஒருவர் இந்த இடத்துக்கு அருகில் கூட வரமுடியாது. ஆனால் அதீத ஆர்வம், கடின உழைப்பின் மூலம் நாங்கள் இங்கே வந்துள்ளோம்''.

இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

போஸ்டரில் படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல சிங்கத்தின் ஒரு பாதியும், புலியின் ஒரு பாதியும் இடம்பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டரின்படி படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in