Published : 15 Jan 2021 02:42 PM
Last Updated : 15 Jan 2021 02:42 PM

'கே.ஜி.எஃப் 2' டீஸருக்கு சிக்கல்: சுகாதாரத் துறை நோட்டீஸ்

'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸரில் உள்ள காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜனவரி 8-ம் தேதி யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் யாஷ் உடன் நடித்துள்ளனர். முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பால், 'கே.ஜி.எஃப் 2' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. பல மொழிகளுக்கும் ஒரே டீஸர் என்பதுபோல் திட்டமிட்டு வெளியிடப்பட்டது. கன்னடத் திரையுலகின் டீஸர்கள் செய்த அனைத்துச் சாதனைகளையும் ஒரே நாளில் முறியடித்தது 'கே.ஜி.எஃப் 2' டீஸர். இதுவரை 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்த டீஸரில் பெரிய துப்பாக்கி ஒன்றின் மூலம், ஜீப்புகளைச் சுடுவார் யாஷ். முழுமையாகக் குண்டுகள் காலியானவுடன், அந்தத் துப்பாக்கியின் சூட்டில் சிகரெட்டைப் பற்றவைப்பார் யாஷ். இந்தக் காட்சிதான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்தக் காட்சியே 'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினருக்குப் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

யாஷ் சிகரெட் பற்ற வைக்கும் காட்சிக்கு, கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5-வது பிரிவை மீறிய செயல் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, இந்த டீஸரை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் பேசுகையில், "திரைப்பட நடிகர் யாஷ் சமூக சேவை செய்பவர். நான் அவரைப் பாராட்டுகிறேன். ஆனால், அவரது அடுத்த திரைப்படம் குறித்து எங்கள் துறை அவருக்கு ஒரு அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளது. படத்தில் புகை பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறோம். அவரது ரசிகர் மன்றங்களில் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களின் நலனுக்காக. இது அத்தனை படங்களுக்கும் பொருந்தும்" என்று கூறியுள்ளார்.

படத்தில் இந்தக் காட்சிகள் இடம் பெறலாம் என்றும், ஆனால் அந்தக் காட்சிகளில் புகையிலை எச்சரிக்கை வாசகம் வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான கடிதத்தை இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் யாஷ், தயாரிப்பாளர் விஜய் கிராகண்டூர் ஆகியோருக்கு சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில தன்னார்வலர்களும் இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x