'பிரேமம்' இயக்குநரின் அடுத்த படம்: நயன்தாரா ஒப்பந்தம்

'பிரேமம்' இயக்குநரின் அடுத்த படம்: நயன்தாரா ஒப்பந்தம்
Updated on
1 min read

அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்புதான் தனது அடுத்த படத்தை அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார். 'பாட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தை இயக்குவது மட்டுமன்றி, எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பணிகளையும் சேர்த்துக் கவனிக்கவுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இதில் ஃபகத் பாசிலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதில் ஃபகத் பாசிலுக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'பாட்டு' படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரளாவில் தொடங்கவுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு மற்றும் பாடல்கள் உருவாக்கம் ஆகிய பணிகளை அல்போன்ஸ் புத்திரன் கவனித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in