

மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'அடி கப்யாரே கூட்டமணி' படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது.
2015-ம் ஆண்டு மலையாளத்தில் ஜான் வர்கீஸ் இயக்கத்தில் வெளியான படம் 'அடி கப்யாரே கூட்டமணி'. காமெடிக் களத்தில் உருவான இந்தப் படத்தில் தயன் ஸ்ரீனிவாசன், நமீதா பிரமோத், வினீத் மோகன், அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ், முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்தப் படத்தின் ரீமேக் தமிழில் உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தப் படம் 'அடி கப்யாரே கூட்டமணி'யின் தமிழ் ரீமேக் என்கிறார்கள்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தை 'சதுரம் 2' இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இதில் நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளராக பிரவீன், இசையமைப்பாளராக போபோ சசி, எடிட்டராக ராகு, கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.