

'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர் ஆர் ஆர்) படத்தில் ஆலியா பட் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஆலியா பட் நடிக்கவிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'கங்குபாய் கதியாவாதி' என்கிற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து வந்தார்.
தற்போது அந்தப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 27 வயதான ஆலியா பட், பாலிவுட்டில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் நடிப்பது இதுவே முதல் முறை.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில், காரிலிருந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றைப் பகிர்ந்துள்ள ஆலியா, "ஒரு வழியாக 'ஆர் ஆர் ஆர்' குழுவைச் சந்திக்கப் போகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆலியாவின் வருகைக்கு, "எங்கள் அன்பார்ந்த சீதாவுக்கு அன்பான வரவேற்பு. மிகவும் திறமையான, அழகான ஆலியா 'ஆர் ஆர் ஆர்' படப்பிடிப்புத் தளத்தில் !" என்று படக்குழுவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், புகைப்படம் பகிர்ந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 8, 2021 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.