கரோனா நெகட்டிவ்: சிரஞ்சீவி தகவல்

கரோனா நெகட்டிவ்: சிரஞ்சீவி தகவல்
Updated on
1 min read

தனக்கு மீண்டும் நடந்த பரிசோதனையில் கரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், இதற்கு முந்தைய பரிசோதனையில் முடிவு தவறாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

கரோனா ஊரடங்கு சமயத்தில் தொழிலாளர்களுக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார் சிரஞ்சீவி. அவர் தொடங்கிய 'CORONA CRISIS CHARITY' அமைப்புக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பண உதவி செய்தார்கள். அதை வைத்துத் தொழிலாளர்களின் வீடுகளுக்கே மளிகைப் பொருட்கள், பண உதவி எனச் செய்து வந்தார்.

மேலும், தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், 'ஆச்சாரியா' படத்தின் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டார் சிரஞ்சீவி. விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்புக்காக, கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அந்தப் பரிசோதனையில் சிரஞ்சீவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் அறிவித்தார். சிரஞ்சீவிக்குப் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பூரண நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று தனக்கு மீண்டும் நடந்த பரிசோதனையில் கரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், ஏற்கெனவே செய்த பரிசோதனையிலும் பாசிட்டிவ் என்று முடிவு தவறாக வந்துள்ளதாகவும் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கான மருத்துவமனைப் பரிசோதனை முடிவையும் தனது பதிவில் அவர் இணைத்துள்ளார்.

இதுகுறித்து சிரஞ்சீவி கூறியுள்ளதாவது:

''மருத்துவக் குழு மூன்று வெவ்வேறு பரிசோதனைகளைச் செய்து, எனக்குக் கரோனா நெகட்டிவ் என்று தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய பரிசோதனை முடிவு ஒரு தவறான ஆர்டி பிசிஆர் கிட் காரணமாகவே வந்தது என்றும் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் என்மீது காட்டிய அக்கறை மற்றும் அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி''.

இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in