

சிரஞ்சீவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார் சிரஞ்சீவி. அவர் தொடங்கிய 'CORONA CRISIS CHARITY' அமைப்புக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பண உதவி செய்தார்கள். அதை வைத்து தொழிலாளர்களின் வீடுகளுக்கே மளிகைப் பொருட்கள், பண உதவி எனச் செய்து வந்தார்.
மேலும், தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதால், 'ஆச்சாரியா' படத்தின் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டார் சிரஞ்சீவி. விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்புக்காக, கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
அந்தப் பரிசோதனையில் சிரஞ்சீவிக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
" ‘ஆச்சாரியா’ படப்பிடிப்புக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னைக் கடந்த ஐந்து நாட்களில் சந்தித்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளவும். என் உடல்நிலை குறித்து விரைவில் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்."
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, அவருக்குப் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பூரண நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட சிலர் தெலங்கானா முதல்வரைச் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின. இதனால், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே தற்போது கரோனா பரிசோதனை செய்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.