4 மொழிகளில் திரைப்படமா?- பரவும் வதந்தி; அமைதி காக்கும் ஷங்கர்

4 மொழிகளில் திரைப்படமா?- பரவும் வதந்தி; அமைதி காக்கும் ஷங்கர்
Updated on
1 min read

அடுத்த படம் தொடர்பாக பரவி வரும் வதந்திக்கு, அமைதியே பதில் என்கிறது ஷங்கர் தரப்பு.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு தடங்கல்களைச் சந்தித்து வருகிறது. கமலுக்கு மேக்கப் பிரச்சினை, படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு வகையில் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், லைகா நிறுவனமோ 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஷங்கர், லைகா நிறுவனத்துக்குத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அதில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவில்லை எனில், தான் அடுத்த படத்துக்குச் செல்லவுள்ளதாக ஷங்கர் குறிப்பிட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகின.

இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பு உண்டானது. ஆனால், ஷங்கர் தரப்போ இதில் உண்மையில்லை என்று கூறினாலும் அதிகாரபூர்வமாக எந்தவொரு மறுப்பையும் வெளியிடவில்லை. அடுத்ததாக 4 மொழிகளில் ஒரே சமயத்தில் பிரம்மாண்டப் படமொன்றை ஷங்கர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழில் விஜய் சேதுபதி, கன்னடத்தில் யாஷ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிரபல நாயகர்கள் என ஒன்றிணைந்து திட்டமிடுவதாகவும், இந்தப் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ராக்லைன் வெங்கடேஷ் தரப்பில் விசாரித்தபோது, 'இச்செய்தியில் உண்மையில்லை' என்று தெரிவித்தார்கள்.

ஆனால், ஷங்கர் இயக்கத்தில் யாஷ் என்ற செய்தி பெருவாரியாக அனைத்து ஊடகங்களிலும் வெளியாகிவிட்டாலும், ஷங்கர் தரப்போ இப்போதும் அமைதி காத்து வருகிறது.

4 மொழிகளில் திரைப்படம் குறித்து ஷங்கர் தரப்பில் கேட்டால், "அனைத்தையும் ஊகங்கள் அடிப்படையில் எழுதுகிறார்கள். எதுவுமே உண்மையில்லை. விரைவில் ஷங்கர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம்" என்று தெரிவித்தார்கள்.

'இந்தியன் 2' படம் தொடர்பாக ஏதேனும் ஒரு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை, இது மாதிரியான செய்திகளுக்குப் பஞ்சமில்லை என்பது மட்டும் உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in