முதல் பார்வை: மிஸ் இந்தியா

முதல் பார்வை: மிஸ் இந்தியா
Updated on
2 min read

சொந்தத் தொழில் தொடங்கி சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் கதையே 'மிஸ் இந்தியா'.

சின்ன வயதிலிருந்தே சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் லட்சியம். ஒரு பெண்ணுக்கு இப்படியெல்லாம் லட்சியம் இருக்கக் கூடாது என்று அவருடைய வீட்டிலிருந்தே தடை ஆரம்பிக்கிறது. அவர் வளர வளர இன்னும் பல தடைகள் வருகின்றன. அதை எல்லாம் கடந்து எப்படி பெரிய தொழிலதிபராக வளர்ந்தார் கீர்த்தி சுரேஷ் என்பதுதான் 'மிஸ் இந்தியா' படத்தின் திரைக்கதை.

கீர்த்தி சுரேஷை முன்வைத்தே படத்தின் கதை நகர்கிறது. இந்தப் படத்தில் வழக்கத்தை விட ரொம்ப ஒல்லியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சில இடங்கள் மிக அழகாகவும், சில இடங்களில் நோய்வாய்ப்பட்டது போலவும் தெரிகிறார். அவரது நடிப்பில் அக்கறை தெரிந்தாலும் படத்தின் கதையமைப்பில் அவருடைய நடிப்புக்கான தீனி இல்லை. 'விஸ்வாசம்' படத்தின் பாதிப்பிலேயே ஜெகபதி பாபுவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் போல. அவரும் அப்படியே நடித்துள்ளார்.

ராஜேந்திர பிரசாத், நரேஷ் இருவருமே அவர்களுடைய கதாபாத்திரங்களில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். மிடில் கிளாஸ் என்று அடிக்கடி ஃபுல் மேக்கப்புடன் வரும் நதியா கதாபாத்திரத்துக்குப் பெரிய வேலை இல்லை. கீர்த்தி சுரேஷுக்கு உதவும் சுமந்த், நவீன் சந்திரா இரண்டு பேரில் நவீனின் கதாபாத்திரம் ஓரளவு சிறப்பாக இருக்கிறது.

தமனின் பின்னணி இசை மற்றும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு இரண்டும்தான் படத்துக்கு மிகப்பெரிய சாதகங்கள். படம் முழுக்க ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுஜித். மாஸ் நாயகிக்காக எழுதப்பட்டிருக்கும் சுமாரான காட்சிகளைக் கூட பின்னணி இசையால் மேம்படுத்தியுள்ளார் தமன்.

மிஸ் இந்தியா சின்னம், உணவகம், அங்குள்ள பொருட்கள் எனக் கலை இயக்குநர் சாஹி சுரேஷின் பணி வியக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் மில்லியன் டாலர் போட்டியில் கீர்த்தி சுரேஷ் ஜெயிக்கும் விதமும், ஒரு சில வசனங்களும் மட்டுமே நன்றாக உள்ளன

படத்தின் கதையைச் சொன்ன விதத்தில்தான் பிரச்சினை. முன்னோட்டத்தில் முழுக்கதையையும் சொல்லிவிட்டு படம் ஆரம்பிக்கும்போதே கீர்த்தி சுரேஷ் அனைத்து விஷயங்களையும் ஜெயித்துவிட்டு, ஃப்ளாஷ்பேக்கில் கதையைச் சொல்வதுபோல திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி எப்படி ஜெயித்தார் என்ற கதையில், அனைத்துக் காட்சிகளுமே யூகிக்கக் கூடிய வகையில் இருந்தது மிகப்பெரிய பின்னடைவு. எனவே, பார்வையாளர்களுக்குத் திரைக்கதையில் இயக்குநர் நரேந்திரநாத் எந்தவொரு சுவாரசியத்தையும் வைக்கவில்லை.

அனைத்து விஷயங்களையுமே உணர்வுகளை வைத்துக் கையாண்டால் போதும் என எடுத்துள்ளார் இயக்குநர். அது எடுபடவில்லை. கீர்த்தி சுரேஷ் ஜெயித்துவிட்டார் என்று சொன்னாலும் கூட ஒரு சில விஷயங்களைக் காட்டாமல் மறைத்து, ஃப்ளாஷ்பேக்கில் அதைச் சொல்லியிருந்தால் சுவாரசியம் இருந்திருக்கக்கூடும். மான்டேஜ் பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.

கதாபாத்திர உருவாக்கமும் எடுபடவில்லை. படத்தின் ஒரே பெரிய வில்லன் ஜெகபதி பாபு. ஆனால் படம் தொடங்கி ஒரு மணி நேரம் கழித்துதான் வருகிறார். அவருக்கான பில்டப் காட்சிகள் என்று கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பான்மையான வசனங்கள் கேலண்டர் பொன்மொழிகள் போல இருக்கின்றன. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை கீர்த்தி சுரேஷ் அல்லது அவருடன் இருப்பவர்கள் என அனைவரும் கருத்து கந்தசாமிகளாகவே பேசுகிறார்கள். ஒட்டுமொத்தப் படத்தில் பரிசுப் போட்டி காட்சியைத் தவிர புதுமையாக எதுவுமே இல்லை என்பதால் மிகப்பெரிய ஏமாற்றத்தையே படம் தருகிறது.

மொத்தத்தில், இந்த 'மிஸ் இந்தியா' திரைப்படம் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என்று ஒரே பாட்டில் சொல்ல வேண்டிய கதையை இரண்டு முறை தலையைச் சுற்றி 2 மணி நேரமாகக் கொடுத்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வேண்டுமானால் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in