பாடகர் விஜய் யேசுதாஸ் கார் விபத்து: காயமின்றித் தப்பினார்

பாடகர் விஜய் யேசுதாஸ் கார் விபத்து: காயமின்றித் தப்பினார்
Updated on
1 min read

பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸின் கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திங்கட்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து தனது காரில் விஜய் யேசுதாஸ் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் அவரது நண்பர் இருந்தார். அதே நேரத்தில் திருக்காட்டுச்சேரியிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு கார் திருவாரூர் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் சட்டென நுழைய இருவரது கார்களும் மோதின.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் இரண்டு கார்களின் முன் பக்கங்களும் கடுமையான சேதத்துக்கு உள்ளாயின. விபத்து பற்றிக் கேள்விப்பட்டவுடன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சேதமான இரண்டு கார்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விஜய்யும் அவரது நண்பரும் இன்னொரு காரில் கொச்சிக்குக் கிளம்பினர்.

மூத்த பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். பாடகராக அறிமுகமாகி 20 வருடங்களை சமீபத்தில்தான் நிறைவு செய்தார். 'மாரி', 'படைவீரன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மலையாளத் திரைத்துறையில் இனி பாடப்போவதில்லை என்றும், அங்கு இசைக் கலைஞர்களுக்கு மரியாதை இல்லை என்றும், இனி தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே பாட்டையும், நடிப்பையும் தொடரப்போவதாகவும் விஜய் யேசுதாஸ் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in