

'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படத்தில் நடித்ததற்கான காரணம் குறித்து நடிகை தபு பேசியுள்ளார்.
80களிலிருந்து திரையுலகில் நடித்து வருபவர் நடிகை தபு. தமிழில் 'காதல் தேசம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தி மொழியில்தான் தபு அதிகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான 'அந்தாதுன்' திரைப்படம் தபுவுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
1991 ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமான நடிகை தபு, கடைசியாக 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்திருந்தார். இதன் பிறகு 12 வருடங்கள் கழித்து 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படத்தில் தான் மீண்டும் நடிக்க வந்தார். தெலுங்குத் திரையுலகில் 'அலா வைகுந்தபுரம்லோ' வரலாறு படைத்தது. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்ட காரணம் குறித்து தபு பேசியுள்ளார்.
"என் கதாபாத்திரத்தின் அளவு தெரிந்தே நடித்தேன். இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்தப் படத்தில் யஷோதா கதாபாத்திரத்தை எளிதில் யாருக்கும் பிடிக்காது. திமிர் பிடித்த பெண்ணாகத் தெரிவார். என் கதாபாத்திரத்துக்கும் என் கணவராக நடிக்கும் ஜெயராம் கதாபாத்திரத்துக்கும் இடையேயான ஒரு முக்கியமான காட்சியை த்ரிவிக்ரம் விவரித்தார்.
தனது மனைவியின் ஆளுமைக்கு, செல்வத்துக்குத் தான் ஈடாக இருக்க முடியாது என்ற காரணத்தால் வேறொரு பெண்ணைத் தேடிப் போனதாகச் சொல்வார். இதுபோன்ற காட்சிகள் இந்திய சினிமாவில் நிறைய கிடையாது. அப்போதே இந்தப் படத்தில் நடிப்பது மதிப்புடையதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்" என்று தபு கூறியுள்ளார்.