

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளுக்காக தெலுங்குத் திரைப்பட நட்சத்திரங்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து தெலங்கானா மாநிலத்தில் மிகக் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.5,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள், தொழிலதிபர்கள், பெரிய நிறுவனங்கள் எனப் பலரும் இதற்காக முன்வந்து உதவ வேண்டும் என முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கோரிக்கை வைத்திருந்தார். முதல்வர் நிவாரண நிதிக்குப் பணமளிக்க அவர் கேட்டுக் கொண்டார்.
நடிகர் சிரஞ்சீவி, நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் தலா ரூ.1 கோடியும், நடிகர்கள் நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தலா ரூ.50 லட்சமும், நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் முதல்வர் நிவாரண நிதிக்குப் பங்காற்றியுள்ளனர்.
நடிகர் சிரஞ்சீவி, "ஹைதராபாதில் முன்னெப்போதும் இல்லாத அளவு மழையால் மிகப்பெரிய சேதமும், உயிரிழப்பும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்குக் கடினமான சூழலும் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆறுதல்கள். என் பங்காக ரூ.1 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், யாரால் முடிகிறதோ அவர்கள் அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதைப் போலவே மற்ற நடிகர்களும் தங்களது பங்கைப் பற்றியும், கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோள் கொடுப்போம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா, "நாம் சென்னைக்காக ஒன்றிணைந்தோம். கேரளாவுக்காக ஒன்றிணைந்தோம். ராணுவத்துக்காக ஒன்றிணைந்தோம். கரோனாவுக்காகப் பெரிய எண்ணிக்கையில் ஒன்றிணைந்தோம். இம்முறை நமது நகரம், நம்மக்களுக்கு உதவிக்கரம் தேவை.
இந்த வருடம் நம் அனைவருக்கும் கடினமானதாக இருந்துள்ளது. ஆனால், போதுமான அளவு சம்பாதித்துள்ள அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி, இல்லாதவர்களுக்கு உதவுவோம். இன்னும் ஒரு முறை நம் மக்களுக்காகச் செய்வோம்" என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அமைச்சர் கே.டி.ராமா ராவ், நிதியுதவி அளித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.