

அமிதாப் பச்சன் கதாபாத்திரம் குறித்து வெளியான வதந்திகளுக்கு நாக் அஸ்வின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
'ராதே ஷ்யாம்' படத்தைத் தொடர்ந்து 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 9) அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக 'பிரபாஸ் 20' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உடனடியாக, இதில் அமிதாப் பச்சன் கவுரவக் கதாபாத்திரத்தில்தான் நடிக்கவுள்ளார் என்று செய்தி வெளியானது. ஏனென்றால், இறுதியாக நடித்த 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் கூட கவுரவக் கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் அமிதாப் பச்சன்.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் நாக் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அமிதாப் பச்சன் சார் நடிப்பது கவுரவத் தோற்றம் அல்ல. இவரது கதாபாத்திரத்தின் பெயர் தான் ஆரம்பத்தில் படத்தின் தலைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு முக்கியமான முழு நீளக் கதாபாத்திரம். இந்தக் கவுரவத்துக்கு நன்றி அமிதாப் பச்சன் சார். நீங்கள் கொடுக்கும் நேரத்தை மதிப்புடையதாக்குவோம்"
இவ்வாறு நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
'பிரபாஸ் 20' படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டு, 2022-ல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.