'பிரபாஸ் 20' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் ஒப்பந்தம்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 'ராதே ஷ்யாம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நேற்று (அக்டோபர் 8) 'பிரபாஸ்20' படம் தொடர்பான பெரிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
அதன்படி, இன்று (அக்டோபர் 9) 'பிரபாஸ் 20' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியுள்ள அடுத்த படமாக 'பிரபாஸ் 20' அமைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு இன்னும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது முடிவாகவில்லை. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
நாக் அஸ்வின் படத்தை முடித்துவிட்டு, ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் 'ஆதிபுருஷ்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.
