படப்பிடிப்பில் பலத்த காயம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் டொவினோ தாமஸ் அனுமதி

படப்பிடிப்பில் பலத்த காயம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் டொவினோ தாமஸ் அனுமதி

Published on

நடிகர் டொவினோ தாமஸுக்கு 'களா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் மலையாளத் திரைப்படம் 'களா'. திவ்யா பிள்ளை, லால் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். கரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கான அனுமதியை மத்திய அரசு கடந்த மாதம் அளித்தது.

செப்டம்பர் 7-ம் தேதி 'களா' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது நடந்து வருகிறது. இன்று ஒரு சண்டைக்காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில் நாயகன் டொவினோவுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டொவினோ, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. உள் பாகங்களில் அடிபட்டிருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்தான் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த படப்பிடிப்பில் டொவினோவுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு, 'எடக்காட் பெட்டாலியன் 06' என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் டொவினோ தீக்காயங்களுக்கு ஆளானார்.

சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'மின்னல் முரளி' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in