

பிரபல கன்னட நடிகர் சுந்தர் ராஜ், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அறிமுகமான நடிகை பிரமிளா ஜோஷி தம்பதியினரின் ஒரே மகள் மேக்னா ராஜ். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின.
மேக்னா ராஜ் கர்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்து இருந்த மகளுக்கு தந்தை சுந்தர்ராஜ் வளைகாப்பு நடத்த முடிவெடுத்தார். 'கணவர் இல்லாததால் எதற்கு வளைகாப்பு' என மேக்னா முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற மேக்னா ராஜ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் மேக்னா ராஜின் வளைகாப்பு நடந்துள்ளது.
வளைகாப்புக்கு ஒப்புக்கொண்ட உடன் மேக்னா ராஜ் தன் பெற்றோருக்கு தெரியாமல் சிரஞ்சீவி சர்ஜாவின் ஆள் உயர கட் அவுட் செய்ய வைத்துள்ளார். அவ்வாறு செய்யப்பட்ட கணவரின் கட் அவுட்டை தனக்கு அருகிலேயே வைத்து, மேக்னா ராஜ் அமர்ந்துள்ளார். அதனை பார்த்த குடும்பத்தினர், 'மனைவியின் வளைகாப்பை சிரஞ்சீவி சர்ஜா சிரித்துக் கொண்டே பார்ப்பது போல இருக்கிறது' என கண்ணீரில் நனைந்துள்ளனர்.
இந்நிலையில் மேக்னா ராஜ் தன் சமூக வலைதள பக்கங்களில் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்து,'இதற்குதானே சிரு (சிரஞ்சீவி சர்ஜா) நீ ஆசைப்பட்டாய். அதன்படியே சிரித்துக் கொண்டு இருக்கிறேன். உன் காதலுடன் என்றும் உன்னோடு இருப்பேன்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.