திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிதி திரட்ட முடிவு: மலையாள நடிகர் சங்கத்தின் கூட்டு முயற்சி

இயக்குநர் ராஜீவ் குமார்.
இயக்குநர் ராஜீவ் குமார்.
Updated on
1 min read

மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கமான 'அம்மா', நலிந்த திரைக் கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதற்காக திரைப்படம் எடுக்க முடிவெடுத்துள்ளது. இந்தப் புதிய திரைப்படத்தை மலையாளத்தின் பிரபல இயக்குநர், தேசிய விருது வென்ற டிகே ராஜீவ் குமார் இயக்குகிறார்.

ஏற்கெனவே 2008 ஆம் ஆண்டு இப்படி நிதி திரட்டுவதற்காக அம்மா அமைப்பு ஒரு திரைப்படம் எடுத்தது நினைவுகூரத்தக்கது. இதை அம்மா சார்பாக நடிகர் திலீப் தயாரித்திருந்தார். 'ட்வென்டி 20' என்ற இந்தத் திரைப்படத்தை ஜோஷி இயக்கியிருந்தார். இதில் நடித்த மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட எந்த நடிகர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை. மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தின் வசூல் நலிந்த கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

அதைப்போலவே தற்போது எடுக்கப்படும் திரைப்படமும், கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் திரைக் கலைஞர்களுக்கு நிதி திரட்டும் பொருட்டே எடுக்கப்படுகிறது. அப்போது திலீப் போல, இப்போது வேறு யாராவது அமைப்பின் சார்பாக தயாரிப்பாளராகச் செயல்படுவார்களா இல்லையா என்பது முடிவாகவில்லை.

இப்போதைக்கு ராஜீவ் குமார் இயக்குநர் என்பது மட்டுமே முடிவாகியுள்ளது. ஏனென்றால் அவரிடம் இருக்கும் கதை பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கக் கூடிய ஒரு கதை என்றும், எனவே 'ட்வென்டி 20' போல, கிட்டத்தட்ட அம்மா அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும், நடிகர்களும் இதில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த முறையும் யாரும் சம்பளம் பெறப்போவதில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in