சம்பளம் குறைக்காத நடிகர்கள்: கேரளா தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை

சம்பளம் குறைக்காத நடிகர்கள்: கேரளா தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை
Updated on
1 min read

நாயகர்கள் தங்கள் சம்பளத்தில் குறைந்தது 30 சதவீதத்தையாவது குறைக்கவில்லையென்றால் அவர்கள் நடித்து வரும் திரைப்படங்களுக்கு அனுமதி தர முடியாது எனக் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

கரோனா நெருக்கடியால் இந்தியாவில் இருக்கும் பல்வேறு திரைத்துறைகளும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பின் திரைப்பட படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், நஷ்டத்தைக் கட்டுப்படுத்த, நாயகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் இதற்கென ஒரு குழு அமைத்துத் தயாரிப்பில் இருக்கும் பல திரைப்படங்களின் செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் இரண்டு நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்கவில்லை என்றும், முன்பு இருந்ததை விட அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. எனவே அந்த நாயகர்கள் சம்பளத்தைக் குறைக்கவில்லையென்றாலோ, அதிகப்படுத்தினாலோ அந்தப் படத்துக்கு அனுமதி தர வேண்டாம் எனக் கேரள திரைத் தொழிலாளர்கள் அமைப்புக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம், தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்றுச் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தது. தங்கள் உறுப்பினர்களிடமும் இந்த விஷயத்தை வலியுறுத்தியிருந்தது. ஆனால் இதையும் மீறி இரண்டு நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்காமல் அதிக சம்பளம் கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சில மலையாள ஊடகங்களில், டொவினோ தாமஸ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் தான் அந்த நடிகர்கள் என்று குறிப்பிட்டுள்ளன. அதே நேரம் நடிகர் மோகன்லால் தான் சொன்னபடி, தனது வழக்கமான சம்பளத்தில் 50 சதவீதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in