53 வயதில் பட்டப்படிப்பு தேர்வு எழுதிய நடிகை

53 வயதில் பட்டப்படிப்பு தேர்வு எழுதிய நடிகை
Updated on
1 min read

தனது 53-வது வயதில் பட்டப்படிப்பு முடிக்கத் தேர்வு எழுதிய தெலுங்கு நடிகை ஹேமாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஹேமா. இவரது இயற்பெயர் கிருஷ்ண வேணி. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் பல உறுதுணை மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தேவி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தேர்வெழுதச் சென்றது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் ஹேமாவால் அவர் விரும்பியது போல படிப்பைத் தொடர முடியவில்லை. முறையான பள்ளிக் கல்வி இல்லையென்றாலும் பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு ஹைதராபாத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் இப்படியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக பெண்கள், பணியில் இருப்பவர்கள், தங்களது கல்வியை மேம்படுத்த வேண்டும் என விரும்புபவர்கள் மேற்கொண்டு படிக்க வாய்ப்பு தருகிறது.

இதில் இணைந்து படித்து வந்த நடிகை ஹேமா, ஞாயிற்றுக்கிழமை அன்று நல்கொண்ட தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதினார். பிரபலமான நடிகை என்பதால் ஹேமா தேர்வெழுதுவதைப் புகைப்படம் எடுத்துப் பலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வயதிலும் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளைச் செய்து வரும் ஹேமாவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்துள்ளன.

ஆந்திர திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஹேமா தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். ஆனால் தோல்வியுற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in