தபுவின் நடிப்புக்குப் பெரிய ரசிகை: தமன்னா

தபுவின் நடிப்புக்குப் பெரிய ரசிகை: தமன்னா
Updated on
1 min read

'அந்தாதூன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான திரைப்படம் 'அந்தாதூன்'. ஆயுஷ்மான் குரானா கண் தெரியாத பியானோ இசைக் கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருந்தார். வயதான ஒரு நடிகரை அவரது மனைவியும், மனைவியின் காதலரும் கொலை செய்வதை ஆயுஷ்மான் பார்த்துவிட, இதைத் தொடர்ந்து நடக்கும் சுவாரசியத் திருப்பங்களே இந்தப் படம்.

2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. 'அந்தாதூன்' தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் தெலுங்குப் பதிப்பில் ஆயுஷ்மான் கதாபாத்திரத்தில் நிதினும், தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். மெர்லபாகா காந்தி இயக்குகிறார்.

இந்தப் படம் பற்றிப் பேசியுள்ள தமன்னா, "நான் தபுவின் நடிப்புக்கு என்றுமே பெரிய ரசிகையாக இருந்திருக்கிறேன். அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம். 'அந்தாதூன்' திரைப்படம், பார்வையாளர்களின் மீது மனோரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு ஆர்வத்தை உருவாக்கியது. அந்தத் திரைக்கதையின் மேதைமை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் நாயகனும் இல்லை, வில்லனும் இல்லை.

இந்தப் படத்தில் நடிகர்கள் தேர்வு வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். சுவாரசியமாக அதே சமயம் இருண்ட பக்கத்துக்கும் போகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். வழக்கத்தை மீறுவதில் பயமில்லாமல், அதிக சுவாரசியத்தைத் தரும், தனித்துவத்தோடு இருக்கும் திரைப்படங்களை நான் அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

நிதினுடன் நான் முதல் முறை நடிக்கப் போகிறேன். தெலுங்குத் திரையுலகில் நான் இணைந்து நடித்திராத ஒரு சிலரில் அவரும் ஒருவர். எனவே மிகவும் ஆர்வத்துடன் இதை எதிர்நோக்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

'அந்தாதூன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்க, பிரசாந்த் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in