

எஸ்பிபி சகாப்தத்துக்கு ஒரு தேசிய பிரியாவிடை கொடுக்க முடியவில்லை என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"24 மணி நேரமாக நான் தூங்கவில்லை. ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பி, பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக இந்த மோசமான செய்தியைக் கேட்க விழித்திருக்கவில்லை. நாம் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள். இந்தக் காலகட்டத்தில் அந்த சகாப்தத்துக்கு ஒரு தேசிய பிரியாவிடை கொடுக்க முடியவில்லை. இதயம் ஏற்கவில்லை. வலியை வார்த்தைகளில் சொல்ல முடியாது".
இவ்வாறு தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.