

'வி' படத்தில் 'ராட்சசன்' படத்தின் பின்னணி இசையைக் காப்பியடித்துள்ளனர் என்ற விமர்சனத்துக்கு இயக்குநர் மோகன கிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்
செப்டம்பர் 5-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான தெலுங்குப் படம் 'வி'. மோகன கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார்.
ஒரே சமயத்தில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இதில் நானி கொலை செய்யும் காட்சியின்போது வரும் பின்னணி இசை அப்படியே 'ராட்சசன்' படத்துக்காக ஜிப்ரான் போட்டிருந்த இசையாகும்.
'ராட்சசன்' தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டதால், அங்கிருப்பவர்களும் இந்த இசைக் கோர்வை காப்பியடிக்கப்பட்டது என்று விமர்சனத்தில் குறிப்பிட்டார்கள்.
தற்போது இந்த விமர்சனம் தொடர்பாக இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியிருப்பதாவது:
" 'நேனொக்கடினே' படத்தின் டைட்டில் இசையைக் கேட்டால் அதில் உள்ள சில பகுதிகளைப் போல 'வி' படத்தின் இசையும் இருக்கும். ஏனென்றால் இதுபோன்ற படங்களை இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் அணுகுவார்கள். ஒரே மாதிரியான இசைக் கருவிகளைப் பயன்படுத்துவார்கள்.
'ராட்சசன்' இசையும், 'வி' பின்னணி இசையும் கேட்க ஒரே பாணியில் இருக்கும். ஆனால் அது பாணி மட்டுமே. ஒன்றல்ல. வேறு வேறு. தமிழ்நாடு போல இங்கு இல்லை. இங்கு இசை பற்றிய அறிவு ரசிகர்களிடையே குறைவாக உள்ளது. இசையைக் கற்றுக்கொள்ளும், புரிந்துகொள்ளும் கலாச்சாரம் இங்கில்லை. அதை நாம் நீண்ட நாட்களுக்கு முன்பே கொன்றுவிட்டோம்.
ஒரே பாணியில் பாடல்களைக் கேட்டவுடனேயே காப்பி அடித்ததாகக் கூறிவிடுகின்றனர். இது 'வி' படத்துக்கு மட்டும் நடக்கவில்லை. இன்னும் சில திரைப்படங்களின் இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காதபோது கூட குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். ஒரே மாதிரி இசைக் கருவியைக் கேட்டு காப்பி என்கிறார்கள். இதுகுறித்து நான் முடிந்தவரை பதில் கூறி வருகிறேன்.
தமனுக்குத் திறமை அதிகம். அவர் காப்பியடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதுவும் பெரிய வெற்றி பெற்ற ஒரு தமிழ்த் திரைப்படத்திலிருந்து காப்பியடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த சமூக ஊடக காலத்தில் அதை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று அவருக்குத் தெரியாதா?"
இவ்வாறு இயக்குநர் மோகன கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.