

மத்திய, மாநில அரசுகள் போதை மருந்து கும்பலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னடத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த ஹெச்.ஏ.சௌத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரைக் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், கன்னடத் திரையுலக நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
கன்னடத் திரையுலகில் இந்த போதை மருந்து சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. இணையத்தில் சில ரசிகர்கள், ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகையும் விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகர் ஷிவராஜ் குமார், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் ஷிவராஜ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் சக கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிந்து நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் சார்பாக எங்களால் பேச முடியாது. ஏனென்றால் இதுவரை என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். ஒரு சாதாரண குடிமகனாக, மத்திய, மாநில அரசுகள், போதை மருந்து கும்பலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஷிவராஜ் குமார். கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மருமகனும்கூட. கடந்த 40 வருடங்களாக திரைத்துறையிலிருந்து வருகிறார்.
கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் பேசுகையில், "உலகம் முழுவதிலும் பல இளைஞர்களின் உயிர்களைப் பறித்திருக்கும் மோசமான பாதிப்பு இது. இந்தப் பிரச்சினை திரைத்துறையில் மட்டுமில்லை. மிகப்பெரிய உலகில் திரையுலகம் என்பது சிறிய பகுதிதான். ஊடகங்கள் இதைச் சரியான கோணத்தில் காட்ட வேண்டும். ஒட்டுமொத்த கன்னடத் திரையுலகமும் போதைப் பழக்க அடிமைகளால் நிறைந்துள்ளது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடாது. அது சரியல்ல.
இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்தைத் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் தங்கள் பெற்றோரை மனதில் கொள்ள வேண்டும். அவர்கள்தான் நம்மை வளர்க்கப் பாடுபட்டிருக்கின்றனர். ஒரு குழந்தையின் தந்தையாக என்னால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நம் குழந்தை சிறிய கல்லில் இடறி விழுந்தாலும் நாம் பதறுவோம். நமக்கும் அது வலிக்கும். வளர்ந்த பிறகு, இளைஞர்கள் தங்களுக்கு எல்லா சுதந்திரமும் கிடைத்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. அவர்களின் பெற்றோர்களை மதித்து, அவர்களுக்காக (ஒழுங்காக) வாழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.