

ஆண் நடிகர்களுக்குப் போதை மருந்தோடு தொடர்பில்லையா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார் நடிகை பாரூல் யாதவ்.
ஆகஸ்ட் 20-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த ஹெச்.ஏ.சௌத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரைக் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தவிர்த்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மூன்று நாயகிகள் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக நடிகை பாரூல் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"கடைசியாகப் பாலினச் சமத்துவத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. சமூகத்தைப் பிடித்திருக்கும் தீய சக்திகளை, போதை மருந்துப் பழக்கத்தைக் கண்டிப்புடன் ஒழிக்க வேண்டும் என்பதற்கு நான் முழு ஆதரவு தருகிறேன். ஆனால், இந்தியாவில் வெறும் மூன்று பெண்கள் மட்டுமே போதை மருந்தை விற்கிறார்கள் / உபயோகப்படுத்துகிறார்கள் போலத் தெரிகிறது.
வேறு யாருமே இல்லை. கார்ப்பரேட் அதிகாரிகள் இல்லை, தொழிலதிபர்கள் இல்லை, விளையாட்டு வீரர்கள் இல்லை, ஏன் நடிகர்களுக்குக் கூட போதை மருந்தோடு தொடர்பில்லை.
இதில் இருக்கும் பாலினச் சமத்துவப் போராட்டத்தை வென்றுவிட்டோம் எனக் கொண்டாட வேண்டுமா அல்லது எளிதில் நம்மை இரையாக்கிவிட முடிகிறதே என்று அழ வேண்டுமா?"
இவ்வாறு பாரூல் யாதவ் தெரிவித்துள்ளார்.