

தன் காதல் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சுவாரஸ்யமான முறையில் பதிலளித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமானார் ராஷ்மிகா. தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சுல்தான்’, அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை ராஷ்மிகா வைத்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவரது பக்கத்தை 85 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ராஷ்மிகா. அதில் யாரை காதலிக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''எனக்குத் தெரிந்த அனைவருடனும் என் பெயரைத் தொடர்புபடுத்தி பேசுபவர்களுக்கு இதோ என் பதில். நான் சிங்கிள் தான். எனக்கு அது பிடித்திருக்கிறது. மேலும், சிங்கிளாக இருப்பது குறித்து வருத்தப்படுபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நம்புங்கள், சிங்கிளாக இருப்பதை ரசிக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், உங்கள் காதலருக்கான மதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும்''.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.