

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆண்டி ஜம்போ என்பவரிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கி, பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுக்கு வீடுகளுக்கே சென்று விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் கன்னட திரைப்பட இயக்குநரும், பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாகவும்,
சமூகத்துக்கு அழிவை ஏற்படுத்தும் போதைப் பொருளை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் இந்திரஜித் லங்கேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதிக்கும் தொடர்பு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் வெள்ளிக்கிழமைக்குள் (04.09.20) விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ராகிணி திவேதிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் தன்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், போதைப் பொருள் கடத்தல்காரர்களோடு தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றும் ராகிணி தனது அறிக்கையில் நேற்று கூறியிருந்தார். மேலும் மிகவும் குறுகிய அவகாசமே தனக்கு அளிக்கப்பட்டிருந்ததால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (04.09.20) அதிகாலை 6 மணியளவில் பெங்களூருவில் உள்ள ராகிணி திவேதி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் போதைப் பொருள் விவகாரம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளின் இந்த சோதனையால் சூடுபிடித்துள்ளது.
2015ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.