பிறந்த நாளுக்காக பேனர்; மின்சாரம் பாய்ந்து பவன் கல்யாண் ரசிகர்கள் 3 பேர் பலி - திரையுலகினர் நிதியுதவி

பிறந்த நாளுக்காக பேனர்; மின்சாரம் பாய்ந்து பவன் கல்யாண் ரசிகர்கள் 3 பேர் பலி - திரையுலகினர் நிதியுதவி
Updated on
1 min read

பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு பேனர் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்கள் பலியானார்கள். அவர்களுடைய குடும்பத்தினருக்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

இன்று (செப்டம்பர் 2) தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (செப்டம்பர் 1) அவருடைய ரசிகர்கள் அவருக்காக 25 அடி பேனர் ஒன்றை வைத்தார்கள். அப்போது அருகில் சென்ற மின்சார ஒயர் மீது பேனர் படவே, அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் சோமசேகர், ராஜேந்திரா மற்றும் அருணாச்சலம் ஆகிய மூன்று ரசிகர்கள் பலியானார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஆந்திரத் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

பவன் கல்யாண் ரசிகர்கள் மறைவை முன்னிட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

பவன் கல்யாண் நடித்து வரும் 'வக்கீல் சாப்' படத்தைத் தயாரித்து வரும் தில் ராஜு மற்றும் போனி கபூர் இணைந்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல், பவன் கல்யாண் நடித்து வரும் அடுத்த படத்தைத் தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னமும் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

நடிகர்கள் ராம் சரண் தலா 2.5 லட்ச ரூபாய், அல்லு அர்ஜுன் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in