இந்தியில் ரீமேக் செய்யப்படும் அஞ்சாம் பத்திரா

இந்தியில் ரீமேக் செய்யப்படும் அஞ்சாம் பத்திரா
Updated on
1 min read

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'அஞ்சாம் பத்திரா' இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், ஆஷிக் உஸ்மான் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஏபி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் குஞ்சாகோ போபன், ஷரஃப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காவல்துறையினரை இரக்கமின்றித் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் த்ரில்லர் கதை இது. ஜனவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.

"நம்மைச் சீட்டின் நுனியில் வைத்திருந்த ஒரு கச்சிதமான த்ரில்லர் படம் 'அஞ்சாம் பத்திரா'. தேசம் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்காக இந்தப் படத்தை ரீமேக் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று ரிலையன்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 'அஞ்சாம் பத்திரா' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று சொல்வதில் தான் பெருமைப்படுவதாக, படத்தின் அசல் தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான் கூறியுள்ளார்.

மலையாள திரைத்துறையிலிருந்து வந்திருக்கும் இந்த மாணிக்கத்தை உலக ரசிகர்களுக்குக் காட்டுவதில் மகிழ்ச்சி என்று ஏபி இண்டர்நேஷனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in