'ஆச்சார்யா' கதை சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் சாடல்

'ஆச்சார்யா' கதை சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் சாடல்
Updated on
1 min read

'ஆச்சார்யா' படத்தின் கதை சர்ச்சை தொடர்பாக, தயாரிப்பு நிறுவனம் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆச்சார்யா'. இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று 'ஆச்சார்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து சிலர் இது எங்களுடைய கதை என்று உரிமை கோரி வருகிறார்கள். இது தெலுங்குத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கதை சர்ச்சை விவகாரம் தொடர்பாக, 'ஆச்சார்யா' படத்தைத் தயாரித்து வரும் மாட்னீ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

" 'ஆச்சார்யா' திரைப்படத்தின் கதை கொரட்டலா சிவாவால் அசலாக எழுதப்பட்ட கதை. இந்தக் கதை காப்பியடிக்கப்பட்டது என்ற எந்தக் குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றவை.

சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22 அன்றுதான் 'ஆச்சார்யா' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் அதற்குப் பெரும் அன்பும், ஆதரவும் கிடைத்தது. படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சில கதாசிரியர்கள் திரைப்படக் கதை குறித்து தவறான கூற்றை முன் வைக்கின்றனர்.

படத்தின் கதையை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம். குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே கதை தெரியும். வெறும் மோஷன் போஸ்டரை வைத்து கதை உரிமை கோருவது முற்றிலும் அபத்தமானதாக இருக்கிறது. இது ஒரு அசலான கதை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

கொரட்டலா சிவா போன்ற நற்பெயர் பெற்ற இயக்குநருக்கு அவதூறு ஏற்படுத்தும் முயற்சியை ஏற்க முடியாது. இப்போது கதைக்கு உரிமை கோருவது அனைத்தும் ஆதாரமற்றவை. மேலும், அவை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் ஊகமாக உலவி வரும் கதையின் அடிப்படையில் இப்படி உரிமை கோரப்படுவது போலத் தெரிகிறது.

எனவே கதை பற்றிக் கோரப்படும் கூற்றுகள் அனைத்துமே முழுக்கப் பொய்யானவை. ஊகத்தின் அடிப்படையில் செய்யப்படுபவை. 'ஆச்சார்யா' திரைப்படத்தை கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் வழங்க, மாட்னீ என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாக 'ஆச்சார்யா' இருக்கிறது, அதன் வெளியீட்டுக்கும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விரைவில் படத்தை முடித்து ரசிகர்களிடம் கொண்டு வர அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறோம்".

இவ்வாறு மாட்னீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in