

ஒரு வினோதமான, நிச்சயமற்ற சூழலில் இருக்கிறோம் என்று நானி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வி'. இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும்.
கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால், 'வி' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இன்று (ஆகஸ்ட் 26) வெளியாகி, சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'வி' படம் ஓடிடி வெளியீட்டை தேர்ந்தெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். தற்போது 'வி' படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் நானி.
அதில், நாம் ஒரு வினோதமான, நிச்சயமற்ற சூழலில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் நானி. அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"திரையரங்க அனுபவதுக்காகக்த்தான் நான் உழைக்கிறேன். ஹைதராபாத்தின் பிரசாத் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி அனுபவம் எனக்கு எவ்வளவுப் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் ஒரு வினோதமான, நிச்சயமற்ற சூழலில் இருக்கிறோம். படம் நீண்ட நாட்களுக்கு முன் முடிந்து விட்டது. படத்தை வெளியிட காத்துக்கொண்டே இருக்க முடியாது. நாங்கள் இது பற்றி கலந்துரையாடினோம். ஒரு பெரிய, பிரம்மாண்ட திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் முயற்சியை யாராவதுத் துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்"
இவ்வாறு நானி தெரிவித்துள்ளார்.