

மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தனது தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டொவினோ தாமஸ்ஸும் அவரது தந்தை எல்லிக்கல் தாமஸ்ஸும் சட்டையின்றி, தங்கள் உடல் கட்டைக் காட்டும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள டொவினோ தாமஸ், "என் அப்பா, வழிகாட்டி, ஆலோசகர், உற்சாகம் தருபவர், முடிவெடுப்பவர், உடற்பயிற்சியில் கூட்டாளி. அவரது மார்பில் இடது பக்கமாக இருப்பது 2016ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நடந்து வைக்கப்பட்டிருக்கும் பேஸ்மேக்கர். ஆனால் அதன் பிறகு, அதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உடல் கட்டில் தீவிரம் காட்டி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் டொவினோ தாமஸ் பிரபுவிண்டே மக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். நாயகனாக மட்டுமல்லாமல், பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் கூட டொவினோ நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 2018-ஆம் ஆண்டு தமிழில் மாரி 2 திரைப்படத்தில் தனுஷுக்கு எதிராக வில்லனாக நடித்திருந்தார். கடைசியாக மலையாளத்தில் ஃபாரன்ஸிக் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.