

'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது என்பதை இயக்குநர் ராதா கிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இதரக் காட்சிகள் படப்பிடிப்பு தடைப்பட்டது.
தெலுங்கில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. இது தொடர்பாக இயக்குநர் ராதா கிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"செப்டம்பர் 2-ம் வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரையும் வைத்து மிகவும் நீண்ட இனிமையான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது."
இவ்வாறு ராதா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இதனைத் தொடர்ந்து இந்தியில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் 'ஆதிபுருஷ்' படத்தில் நடிக்கவுள்ளார்.