

விரைவில் குணமடைந்து வரவேண்டும் எஸ்பிபி சார் என்று மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி நேற்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பாரதிராஜா, ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினர், பொது மக்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த கூட்டுப் பிரார்த்தனை முன்னேற்பாட்டை இயக்குநர் பாரதிராஜா ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போது எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் சார். விரைவில் குணமடைந்து வரவேண்டும் எஸ்பிபி அவர்களே. இந்த கடினமான தருணத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்."
இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.