பிரபல பாடகிக்கு கரோனா தொற்று: ரியாலிட்டி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது பரவியதாக தகவல்

பிரபல பாடகிக்கு கரோனா தொற்று: ரியாலிட்டி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது பரவியதாக தகவல்
Updated on
1 min read

பிரபல பின்னணி பாடகி சுனிதா உபத்ரஷ்தா. 1995 முதல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் ‘பத்ரி’, ‘காதல் ரோஜாவே’ உள்ளிட்ட சில படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக சுனிதா தெரிவித்துள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று (20.08.20) வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சுனிதா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

என்னுடைய உடல்நிலை குறித்து கேட்டு எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகளும், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்களிடமிருந்து குறுந்தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவரது அக்கறைக்கும் நன்றி. உங்களிடம் ஒரு தகவல் சொல்லவேண்டும். ஆம், சில தினங்களுக்கு முன் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு சென்றபோது அங்கு எனக்கு லேசான தலைவலி ஏற்பட்டது. ஆனால் அதை நான் அலட்சியம் செய்யாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனையில் துரதிர்ஷ்டவசமாக எனக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. சிறிய அறிகுறிகளாகத்தான் எல்லாம் தொடங்கியது. பொதுவாக அவைகளை நாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

தற்போது நான் குணமடைந்து விட்டேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்,. மருத்துவர்களுடனும் தொடர்பில் இருக்கிறேன். தனிமையில் இருந்தபோது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களது உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன். அவர் விரைவில் குணமடைய நானும் என்னுடைய குடும்பத்தினரும் அமைதியாக பிரார்த்தனை செய்து வருகிறோம்.

இவ்வாறு சுனிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in