Published : 08 Aug 2020 03:41 PM
Last Updated : 08 Aug 2020 03:41 PM

ஃபகத் பாசில் பிறந்த நாள் ஸ்பெஷல்:  பெரிய கண்களின் அபூர்வம்

கொச்சி

இயக்குநர்களின் நடிகன் என இரு பதிற்றாண்டுகளாக அறியப்பட்ட நடிகர் மோகன்லால். அவருக்கு நிகர் அவரே என்ற சொல் வழக்கை மாற்றி அவருக்கு நிகரான ஒரு நடிகராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ஃபகத் பாசில். "வரவேல்பு, சன்மனசுள்ள்வர்க்கு சமாதானம் போன்ற படங்களை இப்போது எடுத்தால் அதன் நாயகனாக ஃபகத்தையே தேர்ந்தெடுப்பேன்" எனச் சொல்லியுள்ளார் மலையாளத்தின் முன்னணி இயக்குநரான சத்யன் அந்திக்காடு. மலையாளத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர் வேணுவும், "மோகன்லாலுக்கு இணையானவர் ஃபகத்" எனச் சொல்லியிருக்கிறார்.

மலையாளம் தாண்டி அறியப்பட்டிருக்கும் ஃபகத் பாசில், ஒரு மோசமான தோல்விப் படம் மூலம் அறிமுகமானவர். ஃபகத்தின் தந்தையான பாசில்தான் அதன் இயக்குநர். தமிழில் விஜய், மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த, உற்சாகத்தில் மகனுக்காக இயக்கிய படம்தான் 'கையெத்தும் தூரத்து'. இதில் ஃபகத், 'ஷானு' என்ற பெயரில் அறிமுகமானார். "வாப்பா உள்பட சுற்றியிருந்த எல்லோரும் படம் நன்றாக வந்திருக்கிறது என்றுதான் கடைசிவரை சொல்லிக்கொண்டிருந்தனர். நானும் அதை நம்பினேன்" என ஃபகத் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அதனால் அந்தத் தோல்வி அவரால் தாங்க முடியாததாக இருந்தது. 2002-ல் வெளிவந்து பாசிலுக்கும் பெரும் தோல்வியைத் தந்தது அந்தப் படம். இதே ஆண்டு 'நந்தனம்' மூலம் அறிமுகமாகி இன்று மலையாளத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன்தான் முதலில் 'கையெத்தும் தூரத்து'க்காக தேர்வுசெய்யப்பட்ட நடிகர். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது இன்று உண்மையில் அவர் செய்த அதிர்ஷ்டம்தான்.

"உன் கடைசிப் படம்தான் நீ யார் என்பதைச் சொல்லும்" என்ற மேற்கோளில் நம்பிக்கை உள்ள ஃபகத், அடுத்த சினிமாவுக்காக முயலவில்லை. உயர் கல்வி பயில அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அது ஒரு வகையில் ஒரு ஒளிச்சோட்டம்தான். ஏழு வருட இடைவேளைக்குப் பிறகு 2009-ல் 'கேரளா கஃபே' என்ற பெயரில் இயக்குநர் ரஞ்சித் தயாரித்த குறும்படத் தொகுப்பு ஒன்றில் ஃபகத் பாசில் என்ற பெயரில் மீண்டும் அறிமுகமானார். எட்டு குறும்படத் தொகுப்பு ஒன்றில்தான் நடித்தார் என்றாலும் ஃபகத்தின் திறன் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம்தான் தான் ஃபகத்தினைக் கண்டுகொண்டதாக சத்யன் அந்திக்காடு ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். கண்கள் மூலம் நடிக்கும் மிகச் சொற்ப நடிகர்களில் ஒருவர் என்ற பெயரும் ஃபகத்துக்குக் கிட்டியது.

2010-ல் கிடைத்த சிறு சிறு வேடங்களில் தயக்கமின்றி நடித்தார் ஃபகத். தனக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷமீர் தாஹீர் இயக்குநராக அறிமுகமான படம் 'சாப்பா குரிசு'. 2011-ல் வெளிவந்த இந்தப் படத்தில் ஃபகத்துக்குக் கிட்டத்தட்ட வில்லன் கதாபாத்திரம். வினித் ஸ்ரீனிவாசனுக்கு ஒரு பாவப்பட்ட தொழிலாளிக் கதாபாத்திரம். இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஃபகத் கதாபாத்திரம் முக்கியமான காரணம் எனப் பாராட்டப்பட்டது. ஃபகத்தின் காத்திருப்புக்குக் கிட்டிய பலன் அது. அதன் பிறகு அந்த ஆண்டில் வேறு படங்கள் எதிலும் ஃபகத் நடிக்கவில்லை.

அதன் அடுத்த ஆண்டு ஃபகத் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆனார். ஆஷிக் அபுவின் '22 ஃபிமேல் கோட்டய'மும் லால் ஜோஸின் 'டைமண்ட் நெக்லஸு'ம் இதைச் சாத்தியப்படுத்தித் தந்தன. இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதாபத்திரம்தான். ஆனாலும் இரண்டிலும் வேறுபாட்டைக் காண்பித்திருப்பார்.

அடுத்த ஆண்டு ஃபகத்தின் அடுத்த கட்ட நகர்வுக்குக்கான களமாக ஆனது. பெண்களை ஏமாற்றுபவனாகவும் மோசக்காரனாகவும் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஃபகத்துக்கு அழகான காதல் கதைகள் கிடைத்தன. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்குநராக அறிமுகமான 'அன்னயும் ரசூலும்' படம் அதில் ஒன்று. தன் பெரிய கண்களால் அன்னயை முதன் முதலாக ரசூல் பார்க்கும் காட்சியில் ஃபகத்தின் கண்கள், கண்டதும் காதல் என்ற பதத்தை பார்வையாளர்களுக்குப் புரியவைத்தது.

காதல், கையாலாகாத்தனம், குற்றவுணர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த ஃபகத் கண்களைத் திருத்தமாகப் பயன்படுத்தியிருப்பார். ஃப்கத்தின் கண்கள் இயக்குநர்களின் வேலையை எளிதாக்கிவிடுவதாக இயக்குநர்கள் பலரும் பகிர்ந்திருக்கிறார்கள். ஆஷிக் அபு, கேமரா வழியாகப் பார்க்கும்போது ஃபகத்தின் பெரிய கண்கள் பிரமிப்பை உண்டு பண்ணுவதாகச் சொல்லியிருக்கிறார். டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'மாயாநதி'யில் ஃப்கத் நடித்திருந்தால் படம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் எனவும் அவர் வியந்திருக்கிறார். பெரிய கண்களுடைய நடிகர்கள் ஆபூர்வம். அந்தக் கண்கள் வழி ஆயிரமாயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகர்கள் அரிது. அவர்களுள் ஒருவர் ஃபகத் பாசில்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் 'ஆமென்' அந்த ஆண்டின் அடுத்த காதல் கதை. இது யதார்த்துக்குச் சற்று மேலே பறக்கும் கதை. ஒரு ஃபேண்டசியான கிராமத்தின் காதல் கதை என்று இதைச் சொல்லலாம். இந்தப் படத்தில் ஒரு பாவம் பையனாக ஃபகத் தன்னை நிரூபித்திருந்தார். அனில் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வந்த 'நார்த் 22 காதம்' படத்தில் முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு அளித்திருப்பார். இந்த ஆண்டின் இறுதியில் சத்யன் அந்திக்காடின் அசலான கிராமத்துக் கதையில் (ஒரு இந்தியன் பிரனயகத) நடித்து மோகன்லாலைப் போல் வெற்றியும் பெற்றிருப்பார்.

ஃபகத்தைத் தோல்விகளின் நாயகன் என்று அழைக்கலாம். தோல்விகள் எனக்கு ரொம்பப் பழக்கமானவை. அதனால் தோல்விகள் மீது பயம் இல்லாமல் போய்விட்டது என ஃபகத் ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். தோல்வியில் அறிமுகமானதுபோல் அடுத்த இரு ஆண்டுகள் ஃபகத் மோசமான தோல்விப் படங்களைக் கொடுத்தார். ஃபகத் இனி இல்லை எனச் சொல்லப்படும் அளவுக்குப் பெரும் தோல்விப் படங்களாக ஆனவை அவை.

குஞ்சாக்கோ போபன் இதேபோல் தோல்விகளைச் சந்தித்து வில்லன், துணை நடிகர் எனச் சுருங்கிச் சிறிது சிறிதாக சினிமாவை விட்டே விலகிப் போய் ரியல் எஸ்டேட் வியாபாரம் பார்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். அந்த நிலையின் விளிம்பிலிருந்தார் ஃபகத். இளம் இயக்குநர்களுடன் கைகோப்பதுதான் இதன் காரணம் என விமர்சிக்கப்பட்டது. மலையாள நாயகர்கள் நடிக்கக் காத்துக்கிடக்கும் வெற்றி இயக்குநர் ஜோஷியின் அழைப்பை ஃபகத் ஏற்கவில்லை. மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களான சித்திக்-லால் அழைப்பையும் நிராகரித்தார். இவையெல்லாம் விமர்சிக்கப்பட்டன. ஆனாலும் ஃபகத் தளரவில்லை. இன்னும் பல ஒப்புக்கொண்ட படங்களுக்கான முன்பணத்தைத் திருப்பித் தந்தார். மீண்டும் ஒரு இளம் இயக்குநரின் படத்தில் நடிக்க ஆயத்தமானார். அது அவரது 'ரெண்டாம் திருச்சு வரவு' ஆனது. அந்தப் படம் 'மகேஷிண்ட பிரதிகாரம்'.

திலீஷ் போத்தனின் 'மகேஷிண்ட பிரதிகாரம்' ஃபகத்துக்கு மீண்டும் ஒரு நாயக அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. இந்தப் புதிய கூட்டணி மலையாள சினிமாவுக்கும் ஆரோக்கியமான தொடக்கமாக ஆனது. இந்த இணையின் அடுத்த படமான 'தொண்டிமுதலும் திருக்சாட்சியும்' படம் ஃபகத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் இரு முறை கேரள சலச்சித்ர அகாடமி விருதையும் பெற்றார்.

ஃபகத்தின் 'ரெண்டாம் திருச்சி வரவி'ல் 12 படங்களில் நடித்திருக்கிறார். அதில் இரு படங்களைத் தவிர எல்லாம் வெற்றிப்படங்கள். இதில் இரு தமிழ்ப் படங்களும் அடக்கம். இயக்குநர்கள் பலரின் படங்களை ஒப்புக்கொள்ளவும் இல்லை. இதில் அவர் எந்தத் தயவு தாட்சண்யத்துக்கும் அந்தஸ்துக்கும் இடம் அளிக்கவில்லை. அதேபோல் நல்ல கதையுள்ள திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களாலும் நடிக்கத் துணிந்தார். 'தொண்டிமுதலும்' படத்தில் இரண்டாம் பாதியில்தான் ஃபகத் அவதரிக்கிறார். அதுபோல் முற்றிலும் பாதகமான கதாபாத்திரத்தில் 'கும்பளங்கி நைட்ஸி'ல் நடித்திருப்பார். இப்போதும் அவர் நடிப்பு மிகை நடிப்பாக இருப்பதாக விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு ஃபகத் வேறு இரு கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள் பொருத்தமானதாக இருக்கும். "சினிமாவில் ஏது யதார்த்தம்?", "நான் உண்மையில் ஒரு தோல்விக்காகக் காத்திருக்கிறேன்".

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x