தெலுங்கில் உருவாகும் முதல் ஜாம்பி படம்

தெலுங்கில் உருவாகும் முதல் ஜாம்பி படம்
Updated on
1 min read

தெலுங்கில் உருவாகும் முதல் ஜாம்பி படமாக 'ஜாம்பி ரெட்டி' அமைந்துள்ளது. பிரசாந்த் வர்மா இப்படத்தை இயக்கவுள்ளார்.

2018-ம் ஆண்டு நானி தயாரிப்பில் வெளியான 'ஆவ்!' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் வர்மா. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தேசிய விருதையும் வென்றது.

'ஆவ்!' படத்தைத் தொடர்ந்து ராஜசேகர் நடித்த 'கல்கி' படத்தை இயக்கினார் பிரசாந்த் வர்மா. அதனைத் தொடர்ந்து 'குயின்' தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகி, அதன் அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிரசாந்த் வர்மா. ஜாம்பிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ள இந்தப் படத்துக்கு 'ஜாம்பி ரெட்டி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் உருவாகும் முதல் ஜாம்பி படமாக 'ஜாம்பி ரெட்டி' அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜசேகர் வர்மா தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனித் ஒளிப்பதிவாளராகவும், மார்க் கே.ராபின் இசையமைப்பாளராகவும், சாய் பாபு எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in